இந்தியா

தேசிய மருத்துவ ஆணைய கெடுபிடியால் 600 மாணவர்கள் பாதிப்பு; வீணாகும் 2000 எம்பிபிஎஸ் இடங்கள்

இணையதள செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் கெடுபிடியால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 600 எம்பிபிஎஸ் மாணவர்கள், தங்களது சேர்க்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே சேர்ந்த கல்லூரிகளிலிருந்து வெளியேறி எம்பிபிஎஸ் சேர்ந்து, தற்போது அதுவும் இல்லாமல் ஆகி, ஒட்டுமொத்தமாக அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.

இதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே நிரப்பாமல் வைத்திருக்கும் 1500 எம்பிபிஎஸ் இடங்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட 2000 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த ஆண்டு வீணாகும் மிகக்கொடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரே ஒரு எம்பிபிஎஸ் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களும், நீட் பயிற்சியின்போதே மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களும் ஒருபுறமிருக்க, ஒன்றல்ல, இரண்டல்ல.. கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமாக எம்பிபிஎஸ் இடங்கள் வீணாகிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

நிகழாண்டில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்திருந்தது. 

இது தொடா்பாக என்எம்சியின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பில், நிகழாண்டு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் என்எம்சி விதிகளுக்கும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கும் புறம்பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவா் சோ்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது.

எனவே, என்எம்சி அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது என்றும், ஒருவேளை மாணவா்களை கல்லூரிகளில் சோ்த்திருந்தால் அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒருவேளை மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, காலக்கெடுவை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலொழிய தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த உத்தரவால், சுமார் 2000க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஐந்தரை ஆண்டு காலத்துக்கும் காலியாகவே இருக்கும் அபாயம் உள்ளது.

மத்திய, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அனைத்தையும் கலந்தாலோசனை நடத்திய பிறகு, 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சேர்க்கை இடங்கள் காலியாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது எனறு உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், மகாராஷ்டிரம், பிகாா், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபரில் கலந்தாய்வு நடத்தி காலியாக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணையம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற பல மாணவர்கள், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே சேர்க்கை பெற்று, மருத்துவக் கல்வியில் சேர்க்கை கிடைக்கிறதே என்பதற்காக ஏற்கனவே சேர்ந்த என்ஐடி போன்ற கல்லூரிகளில் இருந்து விலகி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாகவும், தற்போது மருத்துவ  மாணவர் சேர்க்கையும் செல்லாது என்று அறிவித்திருப்பதால், கலை அறிவியல் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால், 600 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக மாணவர்களும் பெற்றோரும் கலங்கி நிற்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

SCROLL FOR NEXT