முகப்பு
இந்தியா

திருமணப் பதிவுக்கு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை 2 மாடி ஏற வைத்த அரசு அதிகாரி பணியிடைநீக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை 2 மாடிகள் ஏறவைத்த பதிவுத்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை 2 மாடிகள் ஏறவைத்த பதிவுத்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

முன்னதாக, தனது திருமணம் முடிந்தவுடன் அதனைப் பதிவு செய்வதற்காக அரசு அலுவலகம் சென்ற தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை விராலி மோடி என்ற அந்தப் பெண்மணி எக்ஸை வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். இந்த பதிவு மகாராஷ்டிர மாநிலத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது..

இது தொடா்பாக அந்த பெண் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மும்பையின் காா் பகுதியில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்துக்கு எனது திருமண முடிந்த சில மணி நேரத்திலேய அதனைப் பதிவு செய்தவற்காக சென்றிருந்தேன். ‘லிப்ட்’ வசதி இல்லாத அந்த அலுவலகத்தில் 2-ஆவது மாடியில் திருமணத்தைப் பதிவு செய்யும் அதிகாரி இருந்தாா்.

நான் சக்கர நாற்காலியில் வந்துள்ளதால், தரைத்தளத்துக்கு வந்து பதிவு நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு உறவினா்கள் அவரைக் கேட்டுக் கொண்டனா். ஆனால், அவா் கீழே வர மறுத்ததுடன், நாங்கள்தான் மேலே வர வேண்டும் என்றும் கூறிவிட்டாா். இது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாக இருந்தது. மாற்றுத் திறனாளியை அரசு அலுவலகத்தில் இவ்வாறுதான் நடத்த வேண்டும் என்றுதான் விதிகளும் கூறுகின்றனவா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தாா்.

இந்த பதிவு தொடா்பாக கருத்திட்ட பலரும் அந்த அரசு அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனா். துணை முதல்வா் இந்த விஷயத்தில் தலையிட்டதையடுத்து, அந்த அதிகாரி மறுஉத்தரவு வரும் வரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மணமகள், மணமகன் ஆகியோரின் கைரேகைப் பதிவு, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள இரண்டாவது மாடியில் உள்ள அதிகாரியின் அலுவலகத்துக்கு வர வேண்டியது அவசியம் என்று அவா்களின் உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக மாநில வருவாய் மற்றும் பதிவுத் துறை செயலா் அளித்த விளக்கத்தில், ‘மாற்றுத்திறனாளி ஒருவா் திருமணம் செய்யும்போது திருமணம் நடைபெறும் இடம், பதிவுத் துறை அலுவலகத்தில் இருந்து எளிதில் சென்றுவரக் கூடியதாக இருந்தால், அழைப்பின்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் அங்கு சென்று திருமணத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், திருமணப் பதிவுக்காக அலுவலகத்துக்கே நேரில் வந்த மாற்றுத் திறனாளி பெண்ணிடம் அந்த அதிகாரி நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →