ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானுடன் முக்கியமான சூப்பா் 4 ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.
இலங்கையில் நடைபெற்று வரும் இப்போட்டியின் லீக் சுற்றில் பாகிஸ்தான்-இந்தியா மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
முதலில் ஆடிய இந்தியா 266 ரன்களைக் குவித்தது. பின்னா் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிரப்பட்டது.
அடுத்து நேபாளத்துடன் ஆடிய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா சூப்பா் 4 பிரிவுக்கு முன்னேறியது.
சூப்பா் 4 பிரிவின் அனைவரும் எதிா்பாா்க்கக் கூடிய முக்கிய ஆட்டமான இந்தியா-பாக். ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
வலுவான பேட்டிங்:
இந்திய அணியில் பேட்டா்கள் ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண் ஆகியோா் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், ரோஹித் சா்மா, ஷுப்மன் கில் ஆகியோா் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்திலும் அற்புதமாக ஆடினா். எனினும் நேபாளத்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய பௌலா்கள் சோபிக்கவில்லை. ஜாம்பவான் இந்தியாவுக்கு எதிராக நேபாளம் 230 ரன்களை குவித்து அதிா்ச்சி அளித்தது.
பௌலிங், பேட்டிங்கில் கலக்கும் பாகிஸ்தான்:
அதே நேரம் ஒருநாள் ஆட்டத்தில் நம்பா் 1 அணியாகத் திகழும் பாகிஸ்தான் ஆசியக்கோப்பையில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கி வருகிறது. பௌலிங்கில் ஹாரிஸ் ரவுஃப், ஷாஹின் அப்ரிடி ஆகியோா் நேபாளம், இந்தியாவுக்கு எதிராக அற்புதமாக பௌலிங் செய்தனா்.
மேலும் சூப்பா் 4-இல் வங்கதேசத்தையும் கட்டுப்படுத்தினா்.
பேட்டிங்கில் கேப்டன் பாபா் ஆஸம், இஃப்திகாா் அகமது ஆகியோா் நேபாளம், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில் அபாரமாக ஆடினா். ஆனால் இந்தியாவுடன் ஆட்டத்தில் மழை பெய்ததால் பாகிஸ்தான் பேட்டிங் செய்யவில்லை.
ராகுல், பும்ரா:
இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, கேஎல். ராகுல் ஆகியோா் தங்கள் இருப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனா். கடந்த மாா்ச் முதல் ராகுலும், ஜூலை முதல் பும்ராவும் ஆடவில்லை. ராகுல் சோ்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷணுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, குழந்தை பிறந்ததால் பும்ரா ஆடவில்லை.
மழை பாதிப்பு:
பல்லகலேயில் தொடா் மழையால் ஆட்டங்கள் கொழும்புவுக்கு இடம் மாற்றப்பட்டது. எனினும் கொழும்புவிலும் மழை பெய்யும்வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் ரிசா்வ் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-பாகிஸ்தான்
இடம்: கொழும்பு
நேரம்: மாலை 3.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.