முகப்பு
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்பு மீதான தாக்குதல்: ப.சிதம்பரம் பேச்சு

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்... இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்" என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

Updated On : 17 செப்டம்பர் 2023, 6:37 pm IST
பகிர்:


ஹைதராபாத்: "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்... இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்" என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஹைதராபாத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைக்கப்பட்ட புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் தெலங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Advertisement

Advertisement

அப்போது,  'ஒரே நாடு, ஒரே தேர்தல்' யோசனையை காங்கிரஸ் முற்றிலுமாக நிராகரிக்கிறது, இது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும் என்றும், இவற்றை நிறைவேற்றுவதற்கான போதிய உறுப்பினர்கள் பலம் பாஜகவிடம் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

"இருப்பினும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த மாயக்கதையை முன்வைத்து, உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்" என்று ப. சிதம்பரம் தெரிவித்தார். 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.