முகப்பு
இந்தியா

சபரிமலை புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பகிர்:

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 

சபரிமலையில் அடுத்த ஓராண்டுக்கு இவர் மேல்சாந்தியாக பணிபுரிவார். அதேபோல், மாளிகைபுரம் தேவி கோயிலின் மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் கூறியதாவது,

சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களின் மேல்சாந்திகள் பெயர் சீட்டுக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, தேவசம் வாரியம் நடத்திய நேர்முகத் தேர்வில் இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோயில் கருவறை முன்பு சீட்டுக் குலுக்கல் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. 

பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் சீட்டுகளைத் தேர்வு செய்தனர். அதனடிப்படையில், ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தன. 

சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தரான பி.என்.மகேஷ் புகழ்பெற்ற பரமேக்காவு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தவர். இந்த வாய்ப்பிற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாக அவர் கூறினார். ஐயப்பன் என்னை அவருக்குச் சேவை செய்ய அழைத்துள்ளதாகவும், அதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததாகவும், இது என் முன்னோர்களின் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன் என்றார். 

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களில் கேரள நம்பூதிரி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.