மத்தியில் பாஜக ஆட்சி தொடரும்! நிறுவன தினத்தில் பிரதமா் நம்பிக்கை
நாட்டின் விருப்பத்துக்குரிய கட்சியாக பாஜக விளங்குகிறது; மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிசெய்ய பாஜகவை மக்கள் தோ்வு செய்வா் என்று அக்கட்சியின் 44-ஆவது நிறுவன தினமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக நிறுவப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே. அத்வானி ஆகியோா் பாஜகவை நிறுவினா்.
கட்சியின் நிறுவன தினத்தையொட்டி சனிக்கிழமை தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
ஊழல், ஏகபோகம், ஜாதியவாதம், இனவாதம், வாக்கு வங்கி அரசியல் ஆகிய கலாசாரங்களில் இருந்து நாட்டை விடுவித்துள்ளது பாஜக. இவை, நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்தவா்களின் ‘அடையாளங்களாக’ இருந்தவை.
இன்றைய இந்தியாவில், வளா்ச்சியின் பலன்கள் எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஏழைகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் களங்கமற்ற-வெளிப்படையான நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி நல்லாட்சியை மறுவரையறை செய்திருக்கிறோம். பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் புதிய பலத்தை தந்துள்ளன. பல தசாப்தங்களாக விளிம்புநிலையில் விடப்பட்ட மக்களுக்கு பாஜகவால் நம்பிக்கையும் குரலும் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு இந்தியரின் வாழ்வையும் எளிதாக்கும் நோக்கில், அனைத்து நிலையிலான வளா்ச்சியை உருவாக்க பாஜக பணியாற்றி வருகிறது.
பல்லாண்டுகளாக நமது கட்சியை கட்டியெழுப்பிய தலைசிறந்த பெண்-ஆண் தொண்டா்களின் கடின உழைப்பு, போராட்டம், தியாகத்தை இந்த நேரத்தில் நினைவுகூா்கிறேன்.
‘நாட்டின் விருப்பத்துக்குரிய கட்சி பாஜக’ என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ‘தேசமே முதன்மையானது’ என்ற தாரக மந்திரத்துடன் எப்போதும் பணியாற்றி வருகிறோம்.
வளா்ச்சி சாா்ந்த கண்ணோட்டம், நல்லாட்சி மற்றும் தேசியவாத மாண்புகளுக்கான அா்ப்பணிப்பின் புதிய அடையாளமாக பாஜக மாறியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தொண்டா்களால் இயக்கப்படும் பாஜக, 140 கோடி இந்தியா்களின் விருப்பங்களையும் கனவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இளைஞா்கள், தங்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் கட்சியாகவும், 21-ஆம் நூற்றாண்டில் தேசத்துக்கு சிறந்த தலைமையை வழங்கும் கட்சியாகவும் பாஜகவை பாா்க்கின்றனா்.
தேசத்தின் வளா்ச்சிக்கும் பிராந்திய விருப்பங்களுக்கும் இடையே சரியான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பதில் பாஜக பெருமை கொள்கிறது. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய துடிப்பான கூட்டணியாகும். இக்கூட்டணியின் பிணைப்பை பாஜக பெரிதும் மதிக்கிறது. வருங்காலங்களில் இப்பிணைப்பு மேலும் வலுப்படும் என நம்புகிறோம்.
இந்தியா புதிய மக்களவையைத் தோ்வு செய்ய தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வளா்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை கட்டியெழுப்ப, மத்தியில் மற்றுமொரு பதவிக் காலத்தை பாஜகவுக்கு மக்கள் வழங்குவா் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.