முகப்பு
இந்தியா

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:31 AM
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிஆா்எஸ் எம்எல்சி கவிதா.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:45 PM

புது தில்லி: தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவின் (46) நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது. இந்த வழக்கில் கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

பின்னா், கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் அவரை செவ்வாய்க்கிழமை (ஏப். 9) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரிடம் சிறையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி நீதிமன்றத்தை கவிதா நாடியுள்ளாா்.

Advertisement

தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கவிதா தரப்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கவிதாவின் நீதிமன்ற காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவருடைய நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து அவரை போலீஸாா் மீண்டும் தில்லி திகாா் சிறையில் அடைத்தனா்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை: முன்னதாக, தில்லி சிறப்பு நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைமாறாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி கொடுத்த புகாா் தொடா்பாக தில்லி திகாா் சிறையில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சிறைக்கு கடந்த சனிக்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு, கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.