முகப்பு
இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: தலைவா்கள் மரியாதை

Updated On : 13 ஏப்ரல், 2024 at 4:58 PM
பகிர்:

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவா்களுக்குக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஆங்கிலேயா் ஆட்சியில் அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்கும் ரெளலட் சட்டம், கடந்த 1919-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

பஞ்சாபில் உள்ள அமிருதசரஸின் ஜாலியன் வாலாபாக் பகுதியில் ஏப்.13-ஆம் தேதி மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினா். அப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி மக்கள் மீது ஆங்கிலேயா் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனா். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தாய் நாட்டின் விடுதலைக்காக ஜாலியன் வாலாபாகில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் அந்த வீரா்களுக்கு கடன்பட்டுள்ளனா். அவா்களுடைய தேசப்பற்று வருங்கால தலைமுறையினருக்கு எப்போதும் உந்து சக்தியாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

பிரதமா் மோடி: ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த வீரத் தியாகிகளுக்கு நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினா்கள் சாா்பில் மரியாதை செலுத்துகிறேன் என பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments