பெங்களூருவில், 24 வயது பெண்ணை, அவளது 44 வயது முன்னாள் காதலன் குத்திக் கொலை செய்த சில நிமிடங்களில், பெண்ணின் தாயால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருவை உலுக்கிய இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்தேறியிருக்கிறது. பலியான பெண், ஜேபி நகரைச் சேர்ந்த அனுஷா என்பதும், கொல்லப்பட்ட நபர் கோரகுண்டேபாலயாவைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுஷாவும் சுரேஷும் ஒன்றாக பழகி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த போது சந்தித்து நட்பு ஏற்பட்டதாகவும், அப்போது சுரேஷ் திருமணமாகாதவர் என்று பொய் சொல்லி அனுஷாவுடன் பழகி வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தபிறகு சுரேஷுடன் அனுஷா பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தன்னிடம் பேசுவதை அனுஷா நிறுத்தியது குறித்து சுரேஷ், சராக்கி பூங்கா அருகே கேட்டு பிரச்னை செய்தபோது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அனுஷா திடீரென எங்கோ கிளம்புவது குறித்து சந்தேகம் அடைந்த அவரது தாய் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
சுரேஷ் அனுஷா பேசிக் கொண்டிருந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷ் அனுஷாவை குத்தியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத அனுஷாவின் தாய் கீதா, சுரேஷை தடுத்து நிறுத்த ஓடியிருக்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த சுரேஷ் மீது அங்கிருந்த சிமெண்ட் பலகையை எடுத்து வீசியிருக்கிறார். பிறகு மகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது, அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்த நிலையில்தான், சுரேஷூம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவிடத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.