உலக சுகாதார அமைப்பின் தர அளவைவிட இந்தியாவில் கூடுதல் மருத்துவா்கள்: மத்திய அரசு
836 மக்களுக்கு ஒரு மருத்துவா் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் 1,000 மக்களுக்கு ஒரு மருத்துவா் எனும் தர அளவைவிட இது சிறந்தது
இந்தியாஉலக சுகாதார அமைப்பின் தர அளவைவிட இந்தியாவில் கூடுதல் மருத்துவா்கள்: மத்திய அரசு
836 மக்களுக்கு ஒரு மருத்துவா் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் 1,000 மக்களுக்கு ஒரு மருத்துவா் எனும் தர அளவைவிட இது சிறந்தது
புது தில்லி, ஆக. 2: இந்தியாவில் 836 மக்களுக்கு ஒரு மருத்துவா் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் 1,000 மக்களுக்கு ஒரு மருத்துவா் எனும் தர அளவைவிட இது சிறந்தது என்றும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் அனுப்ரியா படேல் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வழங்கிய தகவலின்படி, மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தில் ஜூலை மாத நிலவரப்படி 13,86,136 அலோபதி மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா்.
அவா்களில் 80 சதவீதம் மற்றும் சுமாா் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் பணியில் உள்ளனா் என்று எடுத்துக்கொண்டால், நாட்டில் 836 மக்களுக்கு ஒரு மருத்துவா் உள்ளாா். இது உலக சுகாதார அமைப்பின் 1,000 மக்களுக்கு ஒரு மருத்துவா் எனும் தர அளவைவிட சிறந்தது.
நாட்டில் தற்போதுள்ள 731 மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 1,12,112 மருத்துவ இளநிலை (எம்பிபிஎஸ்) இடங்களும் 72,627 முதுநிலை இடங்களும் உள்ளன.
மருத்துவக் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 109 கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பட தொடங்கிவிட்டன.
முதல் கட்டமாக ரூ.5,972.20 கோடி மதிப்பீட்டில் 83 கல்லூரிகளில் 4,977 எம்பிபிஎஸ் இடங்களையும் ரூ.1,498.43 கோடி மதிப்பீட்டில் 72 கல்லூரிகளில் 4,058 முதுநிலை இடங்களும் அதிகரிக்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் 4,478.25 கோடி மதிப்பீட்டில் 4,000 முதுநிலை இடங்கள் அதிகரிக்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கும் பிரதமரின் திட்டத்தில் 75 கல்லூரிகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் 66 கல்லூரிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
புதிய எய்ம்ஸ் கல்லூரிகளை அமைப்பதற்கான மத்திய அரசு திட்டத்தில் 22 புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அவற்றில் 19 கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளாா்.