சூரல்மலை: முண்டக்கை மற்றும் சூரல்மலையில் நேரிட்ட மிகப் பயங்கர நிலச்சரிவை நேரடியாகப் பார்த்த ஒரே சாட்சியாக மாறி, மிகப்பெரிய பள்ளத்தின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருக்கிறது கேரள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து.
இந்தப் பேருந்துதான், முண்டக்கைக்கு திங்கள்கிழமை இரவு இயக்கப்பட்ட கடைசிப் பேருந்து. இது முண்டக்கை செல்ல வேண்டிய பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, பாலத்தின் வழியாக சூரல்மலை சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஓட்டுநரும், நடத்துநரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் முண்டக்கையில் இறக்கிவிட்ட பயணிகளின் நிலை என்னவாகியிருக்குமோ என்று கூறி கலங்குகிறார்கள்.
பேருந்தின் ஓட்டுநர் சஜிதாவும், நடத்துநர் முகமதுவும் திங்கள்கிழமை இரவு கல்பெட்டாவிலிருந்து பயணிகளுடன் முண்டக்கை சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சூரல்மலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பேருந்தை பத்திரமாக நிறுத்திவிட்டு தங்களது தங்குமிடத்துக்குச் சென்றுள்ளனர்.
இரவில் பயங்கர சப்தங்கள் கேட்டும், இதுதான் நடந்திருக்கும் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகத்திலிருந்து இவர்களை தொடர்பு கொண்டு நிலச்சரிவு நேரிட்டிருப்பதாகவும், நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா என்று கேட்ட போதுதான் இவர்களுக்கு உண்மை தெரிந்தது. ஆனால், அதுவும் முழுமையான உண்மையல்ல. அதன்பிறகு அவர்களுக்கு நெருங்கியவர்களிடமிருந்து ஒரே தொலைபேசி அழைப்புதான். ஆனாலும் அது ஏன் என்று புரிந்திருக்கவில்லை.
ஆறு மணிக்கு, இவர்கள் வெளியே வந்து பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தை பார்த்தபோதுதான், உண்மையில் நடந்திருப்பது என்ன என்ற அதிர்ச்சித் தகவல் புரிந்தது.
தாங்கள் கடந்து வந்த பாலத்தையெல்லாம் அடித்துச் சென்றிருக்கிறது நிலச்சரிவு என்பது தெரிந்திருக்கிறது. வந்த பேருந்து இருக்கிறது, இதில் முண்டக்கையில் இறங்கிய பயணிகள் இருப்பார்களா என்ற கவலையோடு அவர்கள் நின்றிருந்தனர்.
அங்கு தாங்கள் கண்ட காட்சிகளை உடனடியாக அனைத்தையும் விடியோவாக பதிவு செய்து தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி அதனை பலருக்கும் அனுப்பினால்தான் உடனடியாக உதவிகள் வரும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.