ராஜஸ்தானில் போலி ஆவணங்கள் மற்றும் கால் ரேகைகளைப் பயன்படுத்தி ரூ.25,000-க்கு போலி ஆதார் அட்டைகள் தயாரித்ததாக 3 பேரைக் கைது செய்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், பள்ளி செல்லும் குழந்தைகளின் விழித்திரை ரேகைகள், கை மற்றும் கால் விரல் ரேகைகள் உள்பட அனைத்தையும் பயன்படுத்தி ஆதார் கார்டுகள் தயாரித்துள்ளனர்.
சஞ்சோர் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் மனோகர் லால் என்பவர் கொடுத்தப் புகாரையடுத்து இந்தக் குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், போலி ஆதார் கார்டுகள் தொடர்பான வழக்குகள் ராஜஸ்தான் முழுவதும் பல மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஞ்சோர் மாவட்டம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலிருந்து 150 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த வழக்குப் பதியப்பட்டு 3 நாள்களுக்குள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிபிஐ விசாரணையைக் கோரியது.
ராஜஸ்தான் அரசு கடந்த ஜூலை 9 அன்று இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 30 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் சிபிஐ-க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கணபதி சிங், டோகாராம், கென்னையா லால் ஆகிய மூவரை சிபிஐ கைது செய்தது.
புகாரில் தெரிவித்துள்ளபடி அவர்கள் மூவரும் தங்களது இ-மித்ரா ஐடி மற்றும் ஆதார் ஐடிக்களை பயன்படுத்தி போலி ஆதார் அட்டைகளை தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.