ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கடந்த 4 நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் சிம்லா, குளு, மண்டி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்புகளில் மொத்தம் 53 பேரைக் காணவில்லை என்றும், 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை பாதிப்புகளில் சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் நிறைவடைந்த பின்னரே, உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சாலைகளின் வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சமேஜ் கிராமம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் தற்போது ஒரேயொரு வீடு மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், பிற கட்டடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை இரவு வேளையில், சமேஜ் கிராமத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளத்தில் மிதந்ததாகவும், இதையடுத்து அங்குள்ள பகவதி காளி மாதா கோயிலில் தஞ்சமடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த அனிதா தேவி என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹிமாசலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழு, இந்தோ திபெத் எல்லைக் காவல் ஆகிய பாதுகாப்புப் பிரிவுகளை சேர்ந்த 410 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.