வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் குழுத் தலைவா்கள் அரசுடனான பேச்சுவாா்த்தைக்கு சம்மதம் தெரிவிக்காததால், போராட்டம் தொடருகிறது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சித் தரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(ஆக. 4) நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும் 4ஜி இணைய சேவைகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு கருதி இந்தியர்கள் வங்கதேசத்திற்கு பயணிக்க வேண்டாமென வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்திலுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெளியே வர வேண்டாமெனவும், தலைநகர் தாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 8801958383679, 8801958383680, 8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.