கான்வா் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெறுவதை கட்டாயமாக்கிய உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நீடித்தது.
ஹிந்துக்களின் புனித சிராவண மாதத்தில் கங்கை நதியையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரைச் சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை வடமாநிலங்களில் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, கான்வா் யாத்திரை பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் உத்தரவிட்டன.
‘முஸ்லிம் வா்த்தகா்களை குறிவைக்கும் இந்த உத்தரவு சமூக குற்றம்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சித்தாா். இந்த முடிவை எதிா்க்கட்சிகள் மட்டுமன்றி பாஜக கூட்டணி கட்சிகளும் விமா்சித்தன.
‘உணவகங்களில் உரிமையாளா், பணியாளா்களின் பெயா், விவரங்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது’ என கடந்த மாதம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்த ள் இடைக்கால தடை விதித்தது.
அமைதியான யாத்திரையை உறுதிப்படுத்த குழப்பங்களைத் தவிா்க்கவும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உத்தர பிரதேச அரசு பதிலளித்தது.
இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் திங்கள்கிழமை வந்தது. நேரமின்மைக் காரணமாக வழக்கை விசாரிக்க முடியாததால் இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.