வினேஷ் போகத் தன்னுடைய திறமையையும் அபாரமான மன உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அவரது தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருந்த நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவுக்கு அதிகமாக 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில், இதுவரையில் வினேஷ் போகத்தின் வெற்றி போற்றத்தக்க வகையில் உள்ளது. இதன் மூலமாக அவர் தனது தைரியம், திறமை, அபாரமான மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் அவர் நம் மனதை வென்றுள்ளார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.
பயிற்சியாளர்கள், கடைபிடிக்க வேண்டிய விதிகளை உறுதி செய்ய முயற்சிக்கவில்லையா என்று தெரியவில்லை. அவருடைய எல்லா முயற்சிகளுக்கும் தகுதியான வெகுமதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் கடந்தாண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தை தடுப்பதற்காக வினேஷ்போகத்தை காவல்துறையினர் சாலைகளில் இழுத்துச் சென்ற புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தில் வைரலானது. எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு தற்போதையை ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியில் வென்றதற்கு வினேஷ் போகத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.