அணுமின் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு உற்பத்தி மாநிலம் மின்சாரம் வழங்கக் கூடாது: மாநிலங்களவையில் தம்பிதுரை எம்.பி.
அணுமின் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு உற்பத்தி மாநிலம் மின்சாரத்தை வழங்கக் கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
அணுமின் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு உற்பத்தி மாநிலம் மின்சாரத்தை வழங்கக் கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சக செயல்பாடுகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது: மத்திய பட்ஜெட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு ரூ. 19,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி, நீர் மின் சக்தி, தேசிய பசுமை எரிசக்தி இயக்கம், அணுசக்தி போன்றவற்றை இந்த அமைச்சகம் கையாள்கிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது காற்றாலை மின்சக்தி உற்பத்திக்காக பல்வேறு ஆலைகளை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அவற்றின் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுத்தது?
நீர் மின் திட்டங்களைப் பொருத்தவரையில், நதிகள் இணைப்பு மூலம் அதை சாத்தியமாக்கலாம். கோதாவரி, பாலாறு, காவிரி நதிகளை இணைப்பது ஒரு வாய்ப்பு. ஆனால், அத்திட்டம் நிலுவையில் உள்ளது. கர்நாடகத்தில் இருந்து ஓடும் தென் பெண்ணையாறு தமிழகத்துக்கு வருகிறது. அதன் நீரை தேக்கி வைக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் ஒரு அணையை கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அது நிறைவேறினால் நீர் மின்னுற்பத்தியை பெருக்குவதுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனப்பள்ளி, மகராஜாகடை, மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) , வரட்டனப்பள்ளி, பர்கூர் போன்ற வறண்ட பகுதிகளில் நீர் பிரச்னைகளை தீர்க்க முடியும்.
சூரியசக்தி மின்சாரத்தைப் பொருத்தவரை, அதை அரசு நிறுவனங்களில் மானிய விலையில் நிறுவும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்கவிக்க வேண்டும். சூரியசக்தி மின்னுற்பத்திக்கான சூரியத் தகடுகளை கட்டடங்களில் பொருத்தவும் பராமரிக்கவும் மேலும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அணுசக்தியைப் பொருத்தவரை, பெரும்பாலான மாநிலங்கள் அதை தங்களுடைய மாநிலத்தில் நிறுவ ஒத்துழைப்பதில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய அணு உலை கூடங்குளத்தில் உள்ளது. ஆனால், அணு உலைக் கழிவுகளால் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று உள்ளூர் மக்கள் அச்சப்படுகின்றனர்.
அண்டை மாநிலமான கேரளம் அணுமின் திட்டத்தில் விருப்பம் காட்டவில்லை. கூடங்குளம் போன்ற அணு உலையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கும் பகிரப்படுகின்றன.
இந்த நேரத்தில் அணுமின் சக்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்காத மாநிலங்களுக்கு அணுமின் உற்பத்தி மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மத்திய அரசு வழங்கக் கூடாது என்றார் தம்பிதுரை.