முகப்பு
இந்தியா

கடும் எதிர்ப்பை பதிவு செய்த இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

வினேஷ் போகத்தை தயார் படுத்துவதற்கு அரசுத் தரப்பில் அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 4:44 PM
மன்சுக் மாண்டவியா - Din
பகிர்:

ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மக்களவையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை விளக்கம் அளித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இன்று அறிவித்தது.

வினேஷ் போகத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறினாலும், தகுதி நீக்கத்துக்கு எதிராக ஒலிம்பிக் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், மக்களவையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் போட்டியிட்டார். அந்த பிரிவில் 50 கிலோ எடை மட்டுமே இருப்பது அவசியம். ஆனால், 100 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த அமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

பாரீஸில் உள்ள இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பிடி உஷாவை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

வினேஷ் போகத்தை தயார் படுத்துவதற்கு அரசுத் தரப்பில் அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மன்சுக் மாண்டவியாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த இந்தியா கூட்டணி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.

இதனால், இரவு முழுக்க கடும் பயிற்சி மேற்கொண்ட போதும், 100 கிராம் அதிக எடை இருந்ததால் வினேஷ் போகத்தை தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டது.

வினேஷ் போகத்துக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், நீர் சத்து குறைந்தததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.