முகப்பு
இந்தியா

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிதியமைச்சர்

ரிசர்வ் வங்கி இயக்குநர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 10:27 AM
பகிர்:

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு இயக்குநர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஆக. 10) ஆலோசனை நடத்தியுள்ளார்.

மக்களவையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு சில நாள்களே ஆன நிலையில், புதுதில்லியில் இன்று(ஆக. 10) நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்பட ரிசர்வ் வங்கியின் பிற இயக்குநர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, வங்கிகள் கடன் வழங்குதல் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் முதலீடு ஆகிய வங்கிகளின் மூல நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நிதியமைச்சர் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.

மக்களை கவர்ந்திருக்கும் வகையில் புதுமையான முதலீடு திட்டங்களை வங்கிகள் நடைமுறைப்படுத்தி, வங்கிகளில் அதிகளவில் மக்கள் பணம் செலுத்துவதிலும், முதலீடுகளை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசும்போது, வங்கிகள் வட்டி விகிதங்களை தாங்களாகவே தீர்மானித்துக் கொள்ள அனுமதிக்கபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகரித்து வரும் கடன் தேவைகளுக்கு ஈடுகொடுக்க ஏதுவாக, குறுகிய கால சில்லறையற்ற முதலீடுகளில் வங்கிகள் அதிகம் சார்ந்திருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், வங்கி அமைப்புகளில் தாக்கத்தை உண்டாக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சேமிப்புக் கணக்குகளை ஈர்க்கும் வகையிலான நடைமுறைகளில் வங்கிகள் புதுப்புது சேவைகள் மற்றும் வசதிகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கதேசத்தில் நிலவும் அசாதாராண சூழ்நிலை இந்திய ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் அங்கு அதிகளவில் முதலீடு செய்துள்ளன எனவும், எனினும் விரைவில் இயல்பு நிலை திரும்புமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இயங்கிவரும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், இத்துறை பாதிப்பை எதிர்கொண்டிருப்பினும், முதலீடுகள் பாதுகாப்பாகவே இருப்பதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். வங்கதேசதில் நிலவும் அசாதாராண சூழ்நிலை இந்திய பொருளாதாராத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் அரசுப்பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு சர்ச்சையானதைத் தொடர்ந்து, மாணவர் அமைப்புகள் நாடு முழுவதும் போராடடத்தை முன்னெடுத்தன. போராட்டக்களம் வன்முறையாக வெடித்த்தால் வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வங்கதேச பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா திடீரென ராஜிநாமா செய்து, இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து, வங்கதேசத்தில் அடுத்து தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →