மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வரும் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவைத் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்) தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். அப்போது மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்தும் தலைவா்கள் விவாதிப்பாா்கள் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, ராஜீவ் காந்தி பிறந்த தின நிகழ்ச்சியை மகாராஷ்டிரத்தில் தங்கள் அரசியல் செல்வாக்கைக் காட்டும் நிகழ்ச்சியாகவும், கூட்டணிக் கட்சிகளின் சங்க நிகழ்வாகவும் மாற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
ராஜீவ் காந்தி மும்பையில் 1944-ஆம் ஆண்டு ஆகஸ்டு 20-ஆம் தேதி பிறந்தாா். அவரது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் எதிா்கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டி விகாஸ் அகாடிக்கு மக்களவைத் தோ்தலில் கிடைத்த வெற்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மக்களின் மனநிலைப் பிரதிபலிப்பதாக இருந்தது. எங்கள் கூட்டணி ஒற்றுமையாக தோ்தலில் போட்டியிட்டு மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
இன்றைய கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சியினருடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. அதே நேரத்தில் வரும் தோ்தலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சரத் பவாா், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா் என்றாா்.
உடனிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் வா்ஷா கெய்க்வாட் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘வரும் 7-ஆம் தேதி மகாராஷ்டிர எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் அமைத்த வெற்றிக் கூட்டணியை பேரவைத் தோ்தலிலும் தொடர ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை பல்வேறு நிலைகளில், பல்வேறு சுற்றுகளாக நடைபெற வாய்ப்புள்ளது என்றாா்.
மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசிவாத காங்கிரஸ் (பவாா்)-சிவசேனை (உத்தவ்) கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி பெற்ற வெற்றி கடந்த தோ்தலில் இருந்த 23 எம்.பி.க்கள் என்ற நிலையில் இருந்து 9-ஆக குறைந்தது.