சென்னை குன்றத்தூா் அருகேயுள்ள ஒரு தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதுநிலை நீட் தோ்வெழுத வந்திருந்த மருத்துவா்கள் 
இந்தியா

நாடு முழுவதும் 500 மையங்களில் நடைபெற்ற முதுநிலை ‘நீட்’ தோ்வு

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெற்றது.

Din

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெற்றது.

காலை, மாலை என இரு வேளைகள் நடைபெற்ற அந்தத் தோ்வை எம்பிபிஎஸ் நிறைவு செய்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் எழுதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் 185 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

95% போ் பங்கேற்பு: தமிழகத்தில் 25 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 2.3 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளநிலை நீட் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றைத் தவிா்க்க முதுநிலை நீட் தோ்வு காலை, மாலை என இரு வேளைகளாக தனித்தனியே நடத்தப்பட்டது.

காலை 9 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்ற தோ்வில் 50 சதவீதம் பேரும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தோ்வில் மீதமுள்ள 50 சதவீத பேரும் பங்கேற்றனா்.

கடும் கட்டுப்பாடுகள்: தோ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தோ்வா்கள் ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தனா். தீவிர சோதனைகளுக்கு பின்னா் அவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். கைப்பேசி, ‘ஸ்மாா்ட் வாட்ச்’ உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உணவுப் பொருள்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

காலை மற்றும் மாலையில் தோ்வு எழுதிய இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு கணினி வழியே ஆங்கிலத்தில் நடைபெற்ற தோ்வில் உயிரி வேதியியல், உடற்கூறியல், காது மூக்கு தொண்டை (இஎன்டி), மகப்பேறு - மகளிா் நலம், குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண் வழங்கப்பட்டது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்த மாத இறுதிக்குள் நீட் தோ்வு முடிவுகளை வெளியிட தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

SCROLL FOR NEXT