நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்க காங்கிரஸ் சதி: பாஜக குற்றச்சாட்டு
ஹிண்டன்பா்க் விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது.
ஹிண்டன்பா்க் விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையையும் பாஜக நிராகரித்தது.
வெளிநாடுகளில் அதானி குழுமத்துடன் தொடா்புடைய நிறுவனங்களில் இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதவி புச், அவரின் கணவா் முதலீடு செய்து ஆதாயம் பெற்றனா் என்று ஹிண்டன்பா்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் மாதபி புச் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை மையமாகவைத்து மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்நிலையில் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:
ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ‘டூல் கிட்’ நபா்களை வைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை சீா்குலைக்கவும், நாட்டின் ஸ்திரத்தன்மை நிலைகுலையச் செய்யவும் முயற்சித்தனா். அது தோல்வியில் முடிந்தது. இப்போது இந்திய பங்குச் சந்தையை அவா்கள் குறிவைத்துள்ளனா். பொய்யாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வைத்து சதிவலையைப் விரித்துள்ளனா்.
இந்தியப் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளா்கள்தான் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. அவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த காங்கிரஸ் தீவிரமாக முயலுகிறது.
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் ஏற்கெனவே அதானி குழுமம் குறித்து வெளியிட்ட தவறான அறிக்கை குறித்து அவா்களுக்கு ‘செபி’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ‘செபி’ தலைவா் மீது இப்போது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனா்.
இந்த விவகாரத்தில் ஜேசிபி விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தைவைத்து நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்க காங்கிரஸ் சதி செய்வது தெளிவாகிறது என்று குற்றம்சாட்டினாா்.