தேசியக் கொடியை அதிஷி ஏற்ற முடியாது: கூடுதல் தலைமைச் செயலர்
தில்லி அரசின் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக பொது நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
தில்லி அரசின் சுதந்திர தின விழாவில், அமைச்சர் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற முடியாது என்று பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று மாநில அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்வர்கள் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், தில்லி அரசு சார்பில் நடைபெறும் விழாவில் யார் கொடியேற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொது நிர்வாகத் துறை அமைச்சர் கோபால் ராய், திங்கள்கிழமை கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை இன்று சந்தித்துப் பேசினேன், சுதந்திர தின விழாவில் அமைச்சர் அதிஷி, தேசியக் கொடியேற்றுவார் என்று அவர் தெரிவித்தார். சத்ரசல் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில்,
“விதிகளுக்கு முரணாக இருக்கும் வாய்வழி உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகாது, எனவே நடவடிக்கை எடுக்க இயலாது. சுதந்திர தின விழாவில் முதல்வரின் பங்கேற்பு குறித்து அவரது அலுவலகத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் சிறையில் இருப்பதால் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, இப்பிரச்னை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறது.
இருப்பினும், சத்ரசல் மைதானத்தில் அனைத்து துறையினருடனும் இணைந்து சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் யார் கொடியேற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளது.