தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 21 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 50 நாள்கள் பரோலில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் 21 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து இன்று காலை 6.30 மணியளவில் வெளிவந்த குர்மீத் ராம், உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கவுள்ளார்.
கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், 50 நாள்கள் பரோலில் வெளிவந்துள்ளார் குர்மீத்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் குர்மீத் பரோல் கேட்டபோது, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ஜூன் மாதம் 21 நாள்கள் பரோல் கேட்டு மீண்டும் உயர்நீதிமன்றத்தை குர்மீத் தரப்பு நாடிய நிலையில், தற்போது பரோலில் வெளிவந்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவரான சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு ஹரியாணா மாநிலம் சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேரா சச்சா சௌதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கிலும் குர்மீத் ராம் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.