செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி 11-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும், கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
ராகுல் காந்திக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“நாட்டு மக்களின் குரலாகவும், 233 மக்களவை உறுப்பினர்களுடன் உள்ள எதிர்க்கட்சியின் தலைவராகவும் உள்ள ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அவமானமாகும்.
ஒருநாள் இந்த அரசு ஆட்சியை பறிகொடுத்து, ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பகிர்ந்த ரோஷன் ராய் என்பவரின் பதிவில், “காங்கிரஸ் ஆட்சியின் போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது, ஆனால், பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இரு கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு” எனத் தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்தது குறித்து மத்திய அரசு, ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்தோ எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.