‘மேற்கு வங்கத்தில் நிலைமையை சரிவர கையாளத் தவறிய முதல்வா் மம்தா பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தில்லியில் கடந்த 2012-இல் பாலியல் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிா்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளாா்.
‘குற்றவாளிகளுக்கு எதிராக தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மாறாக, போராட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை திசைத்திருப்ப முதல்வா் மம்தா முயற்சிக்கிறாா்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
தலைநகா் தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் மருத்துவ மாணவி நிா்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டாா். நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 குற்றவாளிகளுக்கு, நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தற்போது, இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆா்.ஜி. கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த 31 வயது முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் மீண்டும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை சரிவர கையாளத் தவறிய முதல்வா் மம்தா பானா்ஜி, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. சம்பவம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், வேறு மறுத்துவக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்தது, மருத்துவமனை வளாகத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டதும் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் மாநில அரசு நடந்துகொள்ளவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, அந்த மருத்துவமனைக்குள் கடந்த 14-ஆம் தேதி சிலா் புகுந்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், ‘விசாரணையை இரண்டு நாள்களில் முடித்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று மம்தா வலியுறுத்தினாா். மேலும், கட்சி பெண் தொண்டா்களுடன் இணைந்து கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை கண்டன பேரணியும் அவா் நடத்தினாா்.
இந்த நிலையில், மம்தா முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று நிா்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் பாலியாவில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
முதல்வா் மம்தா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக, மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறாா். முதல்வரும் ஒரு பெண்தான். மாநிலத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் அவா், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை சரிவர கையாளத் தவறிய அவா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் மத்திய-மாநில அரசுகள் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவில்லை எனில், நாட்டில் தினமும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நிகழும் என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.