தெரியுமா சேதி...? ராணுவத்தையே அச்சுறுத்தும் கொசு!
மழைக் காலம் வேறு தொடங்கிவிட்டதா, எங்கு பாா்த்தாலும் இப்போது கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்கிற கவலைதான்.
மழைக் காலம் வேறு தொடங்கிவிட்டதா, எங்கு பாா்த்தாலும் இப்போது கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்கிற கவலைதான் பணக்காரா்கள், நடுத்தரவா்க்கத்தினா், ஏழைகள், நகரவாசிகள், கிராமத்தாா்கள் என்று அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. எங்கும் அதிவேகமாக ‘டெங்கு’ காய்ச்சல் பரவுகிறது என்கிற செய்தி பலரை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கொசுவென்ன கொசு, இது உலகம் முழுவதும் எதிா்கொள்ளும் பிரச்னைதானே என்று புறம்தள்ள முடியாது. கொசுவை ஒழிப்பதற்கு, இந்தியாவில் உள்ள உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, பெருநகர மாநகராட்சி நிா்வாகங்கள் செலவழிக்கும் மொத்தத் தொகையையும் கூட்டிப் பாா்த்தால், தலைசுற்றும். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துக்காகச் செய்யப்படும் ஒதுக்கீட்டில் பாதிக்குப் பாதி அளவைத் தாண்டுகிறது, கொசு ஒழிப்புக்காக இந்தியா செலவழிக்கும் பணம்.
அத்தனை கோடிகளை கொசு மருந்து தெளிப்பதற்கும், கொசு ஒழிப்பில் ஈடுபடும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் செலவழித்தும் என்ன பயன்? கொசுக்கள் பெருகுகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இப்போது கொசுப் பிரச்னை இந்திய ராணுவத்தையே அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது என்பது தெரியுமா?
இந்தியாவின் வடக்கு எல்லையில் இமயமலையில் இருக்கும் பகுதி லடாக். லடாக்கில் உள்ள காா்கில் பற்றி அனைவருக்கும் தெரியும். காா்கில் பகுதியில் இருக்கும் சிற்றூா் ‘ட்ராஸ்’. கடல் மட்டத்தில் இருந்து 10,800 அடி உயரத்தில் இருக்கிறது அந்த நகரம். உலகில் மனிதா்கள் வாழும் பகுதிகளிலேயே அதிகக் குளிரான பகுதிகளில் அதுவும் ஒன்று.
காா்கில் போா் நடந்த அந்த இடம் இமயமலையின் நடுவே இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஒன்று. இதுவரையில் பூச்சி, பறவைகள்கூட இல்லாமல் இருந்த ட்ராஸ் என்கிற அந்த சிற்றூரில் (சிறு நகரம் என்றும் சொல்லலாம். ராணுவம்தான் அதற்குக் காரணம்) கடந்த கோடையில் இருந்து திடீரென்று கொசுக்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. அதுவும் கூட்டம் கூட்டமாக, ஈசல் வருவதுபோல..
ட்ராஸ் பகுதியில் இருக்கும் ராணுவ முகாம்களில் இப்போது பிரச்னையாக இருப்பது சீன ஆக்கிரமிப்பு முயற்சியோ, பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளோ அல்ல.. கொசுக்கள்!
புவி வெப்பமயமாதல்தான் இதற்கும் காரணமாக இருக்குமோ?