வினேஷ் போகத்துக்கு தங்கப் பதக்கம் வழங்கிய கிராமத்தினர், பண மாலை அணிவிக்கும் இளைஞர்கள் படம்: எக்ஸ்
இந்தியா

வினேஷ் போகத்துக்கு தங்கப் பதக்கம்! கிராமத்தினர் கொடுத்த பரிசுகள்

வினேஷ் போகத்திற்கு கிராமத்தினர் பரிசளித்து கெளரவித்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு அவரின் கிராமத்தினர் சேர்ந்து தங்கப் பதக்கம் வழங்கியுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி வினேஷ் போகத்தின் கிராமத்தினர் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பலர் வினேஷ் போகத்துக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக உள்ளதாக இறுதிச் சுற்று போட்டியின்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரிடம் அரையிறுதிப்போட்டியில் தோற்ற வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியின்றி அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம் வழங்கப்பட்டது.

அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு எதிர்பாராத விதமாக 53 கிலோ எடையில் இருந்த அவர், உணவு, நீர் இன்றி இரவு முழுவதும் கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையைக் குறைத்தார். எனினும் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க 50.1 கிலோ எடையில் அவர் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிவரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாடினார். எனினும் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கடந்த 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

வினேஷ் போகத்துக்கு கிராமத்தினர் வழங்கிய பரிசுகள்

பதக்கம் இன்றி வெறும் கைகளுடன் நாடு திரும்பிய வினேஷ் போகத்துக்கு, நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், எங்கள் பார்வையில் நீங்கள் சாம்பியன்தான் என பலர் வினேஷ் போகத்துக்கு ஆதரவு குரல் எழுப்பினர்.

தில்லி விமான நிலையத்தில் சக வீரர்களாலும், அவரின் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாலும் வினேஷ் போகத் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். தில்லியிலிருந்து அவரின் சொந்த ஊரான ஹரியாணா மாநிலம் பலாலி கிராமத்திற்கு செல்லும் வழியெங்கும் உள்ள கிராமங்களில் மக்கள் சூழ்ந்து வினேஷ் போகத்தை மகிழ்ச்சியோடும் கண்ணீரோடும் வரவேற்றனர்.

அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளிலும் வினேஷ் போகத் பங்கேற்றார். அங்கு பலர் வினேஷுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 வரை 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் வினேஷ் போகத் சிறப்பிக்கப்பட்டார்.

அதில் அவரின் சொந்த ஊரான பலாலியில் உள்ள மக்கள், சார்பில் வினேஷ் போகத்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், கிராமத்திலுள்ள பிரிவுகளுக்கு ஏற்றவாறு விதவிதமான தலைப்பாகையும், பணத்தாலான மாலையும் அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

சார்க்கி தாத்ரி கிராமத்தில் வினேஷ் போகத்துக்கு கிரீடம் அணிவித்து கையில் வாள் பரிசாக அளிக்கப்பட்டது. மகாபாரதத்தின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வழங்கப்பட்டன. மேலும், பண மாலையாக பல்வேறு தொகைகளை கிராமத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.

பதக்கம் பெற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் பேசிய வினேஷ் போகத்,

''இந்த அளவுக்கு மக்கள் கொடுக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியுடையவளா நான் எனத் தெரியவில்லை. இதுபோன்ற (பலாலி) இடத்தில் பிறந்ததற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். மல்யுத்தத்தில் எனக்குத் தெரிந்த சிறிய அளவிலான விஷயங்களை கிராமத்திலுள்ள என் சகோதரிகளுக்கு நான் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை மேம்பாடு அடையும், அவர்கள் என்னுடைய இடத்தில் இருந்து நாட்டை பெருமையடையச் செய்வார்கள்.

என் சகோதரிகளுக்கு நீங்கள் (கிராம மக்கள்) உங்கள் ஆதரவையும், ஆசியையும் வழங்குவீர்கள் என நம்புகிறேன். இத்தனை மணிநேரமான பின்னரும் இரவில் எனக்காக காத்திருந்து மரியாதை செய்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் கடன்பட்டுள்ளேன். என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனப் பேசினார் வினேஷ் போகத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT