கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலை தகனம் செய்ததில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இறுதிச் சடங்குக்காக, சுடுகாட்டுக்கு எங்கள் மகளின் உடலை கொண்டு வந்த போது, அங்கு ஏற்கனவே, மூன்று உடல்கள் இறுதிச் சடங்குக்காகக் காத்திருந்தன. ஆனால், எங்கள் மகள் உடலை அவர்கள் முதலில் தகனம் செய்தனர். எங்கள் மகள் கொலை செய்யப்பட்ட நிலையில், கடும் அதிர்ச்சியில் இருந்த எங்களுக்கு, அப்போது என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது அதெல்லாம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
மூன்று உடல்கள் இருந்தபோது, ஏன் எங்கள் மகள் உடல் முதலில் தகனம் செய்யப்பட்டது. முக்கிய சாட்சியத்தை அழிக்க வேண்டும் என்ற அவசரம் இருந்திருக்கிறது என்கிறார் தந்தை.
இதுவரை, என் மகள் பணியாற்றிய நெஞ்சகப் பிரிவிலிருந்து யாரும் கைதாகவில்லை. அந்த ஒட்டுமொத்த பிரிவும்தான் என் மகள் கொலைக்கு பொறுப்பு. அந்தப் பிரிவைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
கருத்தரங்கு அறையில்தான் சம்பவம் நடந்ததா என்பதே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. சம்பவம் நடந்த அடுத்த நாளில், கருத்தரங்கு அறைக்கு அருகில் இருந்த அறை உடனடியாக இடிக்கப்பட்டு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தையல் வேலை செய்து, எங்கள் மகளைப் படிக்க வைத்தோம். அவளுக்கு இரண்டு கல்லூரிகளிலிருந்து எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு வந்தது. அவர் ஜேஎன்எம் மருத்துவக் கல்லூரியில் படித்தார். மேல்படிப்பு படிக்க விரும்பினார். வீட்டுக்கு அருகில் இருப்பதால் இந்த மருத்துவமனையை தேர்வு செய்திருந்தார் என்று கூறி கண் கலங்குகிறார் தந்தை.
ஆண்டுதோறும் துர்கா பூஜையை வெகுவிமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகக் கொண்டாட தனது மகள் திட்டமிட்டிருந்தார். அவரது முதுநிலை மருத்துவம் முடிவதால் அதையும் சேர்த்துக் கொண்டாடும் வகையில் இருக்கும் என நினைத்தார். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகள் கொலைக்கு நீதி கேட்டு அலைகிறோம் என்கிறார் அவரது தாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.