சந்திராயன் - 3 நிலவில் தரையிறங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்த செயற்கைக் கோள் சேகரித்த அறிவியல் தரவுகளை உலகளாவிய ஆராய்ச்சியாளர்களுக்கு இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 23 அன்று நிலவின் அதிகம் அறியப்படாத தென் துருவத்தில் சந்திராயன் - 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரை இறங்கியது. அதில், விக்ரம் லேண்டரில் 3 மற்றும் ப்ரக்யான் ரோவரில் 2 என மொத்தமுள்ள 5 சேகரிப்பில் உள்ள 55 ஜி.பி. மதிப்பிலான அறிவியல் தரவுகளைப் பயன்படுத்தும் அனுமதியை இஸ்ரோ வழங்கியுள்ளது.
தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தத் தரவுகள் கருவிகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களுடன் மட்டுமே நின்று விடப் போவதில்லை. இந்தத் தரவுகளின் மூலம் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியளர்களுக்கு இது கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
சந்திரயான்-3 தரவுத் தொகுப்புகள் இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் ’கொள்கை அடிப்படையிலான தரவுகள் மீட்பு, பகுப்பாய்வு, பரப்புதல் மற்றும் அறிவிப்பு அமைப்பு’ (பிரதான்) இணையதளத்தில் கிடைக்கின்றன. ( https://pradan.issdc.gov.in/ )
பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ரசாயனப் பகுப்பாய்வுகளை நடத்தி நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரிதல்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தத் தரவுகள் வருங்கால நிலவு ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படும் எண்று கூறப்படுகிறது.
சந்திரயான்-3 இன் தரவுகளை ஆய்வு செய்த அகமதாபாத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நிலவு மிகப்பெரிய மாக்மா எனும் பெருங்கடலில் இருந்து உருவாகி, பின்னர் குளிர்ந்ததாக மாக்மா பெருங்கடல் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விண்வெளி தின உரையில், இஸ்ரோ விண்வெளி துறையில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது என்றும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை நாம் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகள் குறித்த தகவல்கள் 'நேச்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.