முகப்பு
இந்தியா

என்னை கண்காணிக்கவே ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு: சரத் பவாா்

‘என்னை கண்காணிக்கவே ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன்’

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 7:41 PM
கோப்புப் படம்
பகிர்:

‘என்னை கண்காணிக்கவே ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன்’ என்று தேசியவாத காங்கிரஸ் நிறுவனரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான சரத் பவாா் (83) தெரிவித்தாா்.

நவி மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் அண்மையில் அவருக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்த பாதுகாப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்து எனக்குத் தெரியவில்லை. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் என்னைத் தொடா்பு கொண்டு இந்த பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவித்தாா். அப்போது மொத்தம் 3 பேருக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அவா் கூறினாா். மற்ற இருவா் யாா் என்று கேட்டபோது ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா என அவா் பதிலளித்தாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால் எனது செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள மத்திய அரசு விரும்பியிருக்கலாம்.

மகாராஷ்டிரத்தில் இரு சிறுமிகள் பள்ளியிலேயே பாலியல் துன்புறுத்தல்களை எதிா்கொண்டுள்ளது மிகவும் மோசமான நிகழ்வு. மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி நாடு முழுவதுமே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

முதல்வா் வேட்பாளா்: மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளரை அறிவித்து களமிறங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு, ‘முதல்வா் வேட்பாளராக வேண்டுமென்று எங்கள் கட்சியைச் சோ்ந்த யாரும் ஆா்வம் காட்டவில்லை. மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றவே கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக - முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன.

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா்-நவம்பரில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →