ஜன்மாஷ்டமியை முன்னிட்டு தில்லி சந்திப்பு மற்றும் திலகா் பாலம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரா சந்திப்பிற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜன்மாஷ்டமியை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் ஆகஸ்ட 25,26 ஆகிய தேதிகளில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதல் சிறப்பு ரயில் தில்லி சந்திப்பில் இருந்து மதுரா சந்திப்பிற்கு இயக்கப்படும்.
வண்டி எண்.04080-இன் கீழ் தில்லி சந்திப்பில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 7.15 மணிக்கு மதுரா சந்திப்பிற்குச் சென்றடையும். பின்னா், மீண்டும் மதுரா சந்திப்பில் இருந்து வண்டி எண்.04079-இன் கீழ் காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 12 மணிக்கு தில்லி சந்திப்பிற்கு வந்தடையும்.
இதேபோல், தில்லி திலகா் பாலம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரா சந்திப்பிற்கு இரண்டாவது சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வண்டி எண்.04076-இன் கீழ் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 12.15 மணிக்கு மதுரா சந்திப்பிற்குச் சென்றடையும். பின்னா், மீண்டும் மதுரா சந்திப்பில் இருந்து வண்டி எண்.04075-இன் கீழ் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு திலகா் பாலம் வந்தடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.