கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவர் கொலை விவகாரத்தில் மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மீது எதிர்க்கட்சியான பாஜக, கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க மக்கள், மம்தா பானர்ஜியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவரை கங்கை ஆற்றில் மூழ்கடிப்பார்கள் என்று காட்டமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் சுகாந்தா மஜூம்தார்.
மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவரும், கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சருமான டாக்டர் சுகாந்தா மஜூம்தார் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 25) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “மாணவர்களின் போராட்டத்தால் மேற்கு வங்க அரசு அச்சத்தில் உள்ளது, மக்களின் குரல்களை ஒடுக்கக் பார்க்கிறது. ஆனால் மேற்கு வங்க மாணவர் சமூகம் விழித்துக் கொண்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியை அதிகாரத்திலிருந்து நீக்குவதன் மூலம், இம்மாநில மக்கள் அவரை கங்கையாற்றில் மூழ்கடிப்பார்கள்” என்று பேசியுள்ளார்.
மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை பாஜக தொடர்ந்து போராடும். எதிர்காலத்திலும் போராட்டங்கள் பல தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து, மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து 12 மணி வரை, ஒரு மணி நேரம் முழுஅடைப்பு போராட்டத்துக்கு மேற்கு வங்க பாஜக அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி, அரசு அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்துக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் அன்பூர்ணா தேவி, மருத்துவர் கொலை வழக்கை மேற்கு வங்க அரசு திறம்படக் கையாளத் தவறிவிட்டதாக குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை மக்கள் அனைவரும் படித்து, மாநில அரசின் மோசமான நிர்வாகத் திறனை அறிந்துகொள்ளவும் சுகாந்தா மஜூம்தார் இன்று(ஆக. 26) வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.