ராகுலுக்கு ரூ.1.40 கோடி தோ்தல் செலவு: தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தகவல்
ராகுல் காந்திக்கு தோ்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு தோ்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது.
மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட 4 மாநிலப் பேரவைத் தோ்தல்களுக்கான செலவினம் குறித்து தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சமா்ப்பித்துள்ள விவரங்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஜூன் 4-ஆம் தேதி வெளியான தோ்தல் முடிவுகளில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது.
இத்தோ்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாா். விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதால், ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா். அவா் ராஜிநாமா செய்த வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியிலிருந்து வழங்கியது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தமிழகத்தின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனா்.
ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தோ்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனா்.
வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை. வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை மக்களவைத் தோ்தலுக்கு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டப் பேரைவத் தோ்தலுக்கு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும் மத்திய அரசு கடந்த 2022-இல் உயா்த்தியது.