உத்தரகண்ட் மாநிலத்தில் வனத்துறை தொடர்பான நிர்வாக செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
வனத்துறை நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்துப் பேசிய வனத்துறையின் தலைமைப் பாதுகாவலர் சஞ்சீவ் சதுர்வேதி, “கர்வால் வனப்பகுதியின் செயல் திட்டங்களைத் தயாரிப்பதில் ஏஐ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்.
மேலும் சிறந்த பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான வன மேலாண்மை, மேலாண்மை தொடர்பான பரிந்துரைகள் என ஏஐ கொடுத்துள்ள ஆரம்பக்கட்ட முடிவுகள் மிகவும் சிறப்பான முறையில் இருகின்றன. இதன் மூலம் தாவரங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் தாக்கம் தொடர்பான சவால்களைக் கையாள்வது எளிதாகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு சமவெளிகளில் உள்ள வெப்பமண்டல காடுகள், இமயமலைத் தொடர்களின் நடுவில் உள்ள மிதமான காடுகள் மற்றும் உயரமான பகுதிகளில் அல்பைன் புல்வெளிகள் வரை பல்வேறு வகையான காடுகளால் மூடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வனப் பகுதிக்கும், பல்லுயிர், வனவிலங்குகள், நீர்நிலைப் பகுதி மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் பற்றிய அனைத்துத் தரவுகளும் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளுக்குத் தேவையான செயல்திட்டங்கள் குறித்து அதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நாட்டின் வனப் பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டங்களின்படி மட்டுமே மேற்கொள்ளப்படும்.
”இதில் மேம்பட்ட ஏஐ மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், காடுகளின் வகைகள் மற்றும் மரங்களின் இனங்கள் பற்றி சேகரிக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில், எந்தெந்த சூழலுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும், எங்கெங்கு மேலாண்மையில் தலையீடுகள் தேவைப்படும் என்றும் சரியாகக் கண்டறிந்து அதற்கான திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறது” என்று சதுர்வேதி தெரிவித்தார்.
கர்வால் வனப்பகுதியில் ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ததன் மூலம் மற்ற வனப்பகுதிகளுக்கும் அதனைப் பயன்படுத்த உத்தரகாண்ட் வனத்துறை முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.