மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே!!
மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனை சென்றிருப்பது பற்றி...
மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு உடல்நிலை பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
பாஜகவுக்கே முதல்வர் பதவி என்று அறிவித்துவிட்டு, தனது சொந்த கிராமமான சாதாராவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே ஏக்நாத் ஷிண்டே சென்றுவிட்டார். அவர் கவலையோடு சொந்த கிராமம் சென்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு தொண்டை வலி இருப்பதாகவும் குணமடைந்து வருவதாகவும், பாஜகவைச் சேர்ந்தவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவரது சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படுவதால், அடுத்தடுத்து முக்கிய அமைச்சர்கள் பதவிகளுக்கு கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் நிலையில், அமித் ஷாவுடன் இன்று நடைபெறும் முக்கிய கூட்டத்திலும் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை சரியாகததால் புணேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
காய்ச்சலும், தொண்டை வலியும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதால், முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தனது வீட்டைவிட்டு காரில் வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, செய்தியாளர்களிடம் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் முடிந்து 10 நாள்கள்..
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், அரசு அமைப்பதில் 10 நாள்களுக்கு மேல் தாமதமாகி வருகிறது. யார் முதல்வர் என்பதையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவை பெறவுமே இத்தனை காலம் ஆனது.
மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தலைமை ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. தற்போது துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் அப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.