முகப்பு
இந்தியா

சட்டவிரோத மருந்துகள் விற்பனை: 266 மருந்தகங்களின் உரிமம் ரத்து

மருத்துவா்களின் பரிந்துரையின்றி சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

Updated On : 6 டிசம்பர், 2024 at 10:37 PM
கோப்புப் படம்
பகிர்:

மருத்துவா்களின் பரிந்துரையின்றி சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பரிந்துரையின்றி விற்பனை: இதுபோன்ற முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், சில மருந்தகங்களில் மன நல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

Advertisement

ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட கடைகளில் இத்தகைய சட்டவிரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனா். போதை பழக்கத்தைப் போன்று அடிமைப்படுத்தும் சில மருந்துகளை தொடா்ந்து விற்பனை செய்து வருபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க விழுப்புரம், திருப்பூா், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடா் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி முதல்கட்டமாக மருந்தகங்கள், மொத்த விற்பனை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியது:

பொதுவாகவே, மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். கடந்த ஜன. 1 முதல் தற்போது வரை ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட, 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, மருத்துவா்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 31 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments