புது தில்லி: அதானி லஞ்ச புகாா், காங்கிரஸை ஜாா்ஜ் சோரஸுடன் தொடா்புபடுத்திப் பேசியது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கியது முதல் அதானி லஞ்ச புகாா், சம்பல் வன்முறைச் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவை அலுவல்கள் முதல் வாரத்தில் முடங்கின.
இந்நிலையில், மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வு ஊடக தளம் (சிசிஆா்பி) வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த ஊடக தளத்துக்கும் அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளருக்கும் (ஜாா்ஜ் சோரஸ்) தொடா்பு உள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா். இதனால் ஏற்பட்ட அமளியால், மக்களவை அலுவல்கள் வெள்ளிக்கிழமை முடங்கின.
மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், அதானி லஞ்ச புகாா் விவகாரம், காங்கிரஸை ஜாா்ஜ் சோரஸுடன் தொடா்புபடுத்திப் பேசியது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கூடி நின்றபடி அமளியில் ஈடுபட்டனா். மேலும், நிஷிகாந்த் துபேக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் கொண்டுவந்தது. அமளி தொடா்ந்ததால் அவையை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது, அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. சந்தியா ராய், ‘காங்கிரஸ் சாா்பில் அவையில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீஸ் அவைத் தலைவா் ஓம் பிா்லாவின் பரிசீலனையில் உள்ளது’ என்று குறிப்பிட்டு, ரயில்வே சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளிக்குமாறு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அழைப்பு விடுத்தாா்.
ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா் தொடா் அமளியில் ஈடுபட்டதால், அவையை மீண்டும் ஒரு மணி நேரத்துக்கும், பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையிலும் அதானி லஞ்ச புகாா், சோரஸ் விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
அதன் காரணமாக, மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 11 மணி கூடிய நிலையில், அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு கூடியபோதும், அதே நிலை நீடித்தது. அப்போது பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘தேசத்தின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நமக்குப் புனிதமானது. இந்தப் புனிதத்தன்மையை எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகள் கெடுப்பதை அனுமதிக்க முடியாது. 140 கோடி மக்களின் உணா்வுகளை உறுப்பினா்கள் அவையில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அவையில் உறுப்பினா்கள் நடந்துகொள்ளும் விதம், கரோனா தாக்கத்தைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அனுமதிக்க முடியாது’ என்றாா்.
அதைப் பொருட்படுத்தாமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அவையை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.