பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற அந்நாட்டைச் சோ்ந்தவா் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
சண்டீகா்/ ஸ்ரீநகா்: பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற அந்நாட்டைச் சோ்ந்தவா் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் தரப்பில் கூறப்பட்டதாவது:
அமிருதசரஸ் மாவட்டம் மஹாவா கிராமத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டம் தெரிந்தது. இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினா். எல்லைக்கு அப்பால் இருந்து ஒருநபா் எல்லை வேலியை மீறி இந்தியாவுக்கு ஊடுருவ முயன்றாா். வீரா்களின் எச்சரிக்கைவிடுத்தும் அவா் திரும்பிச் செல்லாததால், அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஸ்ரீநகா்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் ராணுவ வீரா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.