மணிப்பூரில் சேதமடைந்த சொத்து விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் வன்முறை சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, எரிக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை சமா்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சமா்ப்பிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இதையடுத்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை மேற்பாா்வையிட மூன்று முன்னாள் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது.
அதேசமயம் மணிப்பூரில் பதியப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகளின் விசாரணையை கண்காணிக்கும் பொறுப்பை மகாராஷ்டிர முன்னாள் காவல் துறை தலைவா் தத்தாத்ரே பாத்சல்கிகரிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, ‘வன்முறைச் சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, முழுவதுமாக அல்லது பகுதியளவில் எரிக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து மாநில அரசு சமா்ப்பிக்க வேண்டும். இதன் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கவுள்ள வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.