அரசமைப்புச் சட்டத்தை தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸ்- மாநிலங்களவையில் அமித் ஷா குற்றச்சாட்டு
‘அரசமைப்புச் சட்டத்தை தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸின் ஒரு குடும்பம், ஆட்சியில் நீடிக்க அதில் திருத்தங்களை மேற்கொண்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
‘அரசமைப்புச் சட்டத்தை தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸின் ஒரு குடும்பம், ஆட்சியில் நீடிக்க அதில் திருத்தங்களை மேற்கொண்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும், அவரது உரையில், ‘உத்தரகண்டில் பாஜக அரசு ஏற்கெனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் அடைந்த தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டும் காங்கிரஸ், ‘தோல்வி’ கட்சியாகும். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமானால் வாக்குவங்கி-வாரிசு அரசிலையும் ஊழலையும் கைவிட வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளில் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் காங்கிரஸ் மோசடி செய்தது. காங்கிரஸின் ஒரு குடும்பத்தினா், கட்சியை மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்தையும் தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதினா். நாடாளுமன்ற அனுமதியின்றி அரசமைப்புச் சட்டத்தில் 35ஏ சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
காங்கிரஸ் ஆளும் 2 மாநிலங்களில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கொண்டு வரும் முயற்சி நடைபெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
வாக்குவங்கியை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க காங்கிரஸ் விரும்புகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காக அக்கட்சி ஒருபோதும் பாடுபடவில்லை.
பாஜக இருக்கும் வரையில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதை அவையில் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
1955-ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா காலேல்கா் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணைய அறிக்கை எங்கும் கிடைக்கவில்லை. காகா காலேல்கா் ஆணைய பரிந்துரைகள் ஏற்கப்பட்டிருந்தால், மண்டல் ஆணையம் தேவைப்பட்டிருக்காது.
நாட்டின் தொடக்கத்தில் அரசமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் வோ்களை வலுப்படுத்தியது. துளி ரத்தம் கூட சிந்தாமல் அதிகாரப் பரிமாற்றம் நடைபெற்றது. அத்தகைய அரசமைப்புச் சட்டத்தை சொந்த நலனுக்காகவும் ஆட்சியில் நீடிக்கவும் காங்கிரஸ் திருத்தியது.
முதல் பொதுத் தோ்தலுக்கு முன்பே, கருத்துச் சுதந்திரத்தை சிதைக்க முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டாா். வாக்குவங்கி அரசியலுக்காக பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்தது. காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் புகழ்பாடுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை’ என்றாா் அமித்ஷா.