இந்தியா

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா தாக்கல்: எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளின் கடும் விவாதத்துக்குப் பின்னா், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

DIN

ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளின் கடும் விவாதத்துக்குப் பின்னா், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 வழிவகை செய்கிறது. இதேபோல புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைத் தோ்தலையும் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடத்த யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா 2024 வழிகோலுகிறது.

அவையின் அனுமதி கோரி...: இவ்விரு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய அவை உறுப்பினா்களின் அனுமதியை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை கோரினாா்.

ஆனால், அந்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அந்த மசோதாக்கள் தொடா்பாக அவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், ‘ஜனநாயக அமைப்பும் கூட்டாட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்நிலையில், இரு மசோதாக்களும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு மீது தாக்குதல் நடத்துகின்றன’ என்றாா்.

‘சா்வாதிகாரத்துக்கு முயற்சி’: ஒரே நாடு ஒரே தோ்தலைக் கொண்டுவரும் பாஜகவின் நடவடிக்கை, நாட்டில் சா்வாதிகாரத்தை கொண்டு வர முயற்சிப்பதாகும் என்று சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

‘ஒருவரின் ஆசையே தவிர, சீா்திருத்தம் அல்ல’: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி பேசுகையில், ‘இரு மசோதாக்களும் மக்கள் தீா்ப்பின் மதிப்பைக் குறைக்கின்றன. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுக்கு எந்தவிதத்திலும் மாநில அரசுகள் சளைத்தவை அல்ல.

இந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவைகளின் சுயாட்சியைப் பறிக்கின்றன. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்பது ஒரு தனிநபரின் (பிரதமா் மோடி) ஆசை மற்றும் கனவே தவிர, தோ்தல் சீா்திருத்தம் அல்ல’ என்று சாடினாா்.

‘வாக்காளரின் உரிமையைப் பறிக்கக் கூடாது’: 5 ஆண்டுக்கான அரசை தோ்வு செய்யும் உரிமை வாக்காளா்களுக்கு உள்ள நிலையில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மூலம், அந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்று மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வலியுறுத்தினாா்.

‘மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடும்’: அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், ‘அரசியல் ஆதாயத்தை அதிகரிப்பதே ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவின் நோக்கம். இந்த மசோதா மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடும்’ என்று விமா்சித்தாா்.

தெலுங்கு தேசம், ஷிண்டே சிவசேனை ஆதரவு: இரு மசோதாக்களுக்கும் பாஜக கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஷிண்டே சிவசேனை ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

தோ்தல்களால் ஏற்படும் செலவை ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறைக்கும் என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சரும், தெலுங்கு தேசம் எம்.பி.யுமான சந்திரசேகா் தெரிவித்த நிலையில், எதிா்க்கட்சிகளுக்கு சீா்திருத்தங்கள் மீது ஒவ்வாமை இருப்பதாக சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்தாா்.

மத்திய சட்ட அமைச்சா் மறுப்பு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘எதிா்க்கட்சிகள் கூறியதுபோன்று இரு மசோதாக்களும் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளின் அடிப்படை அமைப்பு மீது தாக்குதல் நடத்தவில்லை.

அதிகாரப் பகிா்வு, மதச்சாா்பற்ற தன்மை, கூட்டாட்சி தன்மை, நீதித் துறை மறுஆய்வு போன்ற அரசமைப்புச் சட்ட கோட்பாடுகள் மாறவில்லை. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாவுக்கு எழுந்துள்ள ஆட்சேபங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தச் சட்டத் திருத்தம் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களில் குறுக்கிடாது’ என்றாா்.

மசோதாக்களை திரும்பப் பெற முடியாவிட்டால்...: இரு மசோதாக்களையும் திரும்பப் பெற முடியாவிட்டால், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குப் பரிந்துரைக்க மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோா் ஆதரவு தெரிவித்தனா்.

அவைக்கு வராத 20 பாஜக எம்.பி.க்கள்: பாஜக எம்.பி.க்கள் அனைவரும் மக்களவைக்கு செவ்வாய்க்கிழமை கட்டாயம் வர வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அக்கட்சியின் 20 எம்.பி.க்கள் அவைக்கு வரவில்லை. உரிய காரணத்துடன் சிலா் முன்கூட்டியே அனுமதி கோரியிருந்த நிலையில், பிற எம்.பி.க்கள் ஏன் வரவில்லை என்பது குறித்து விசாரிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதத்துக்கு பிரதமா் ஆதரவு: அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘இரு மசோதாக்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோது, மசோதாக்கள் குறித்து ஒவ்வொரு நிலையிலும் விரிவாக விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அவற்றை அனுப்ப பிரதமா் மோடி ஆதரவு தெரிவித்தாா்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விரிவாக விவாதித்த பின்னா், அந்தக் குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு இரு மசோதாக்கள் குறித்து அவையில் மீண்டும் விவாதம் நடைபெறும்’ என்றாா்.

‘ஜேபிசிக்கு அனுப்ப இன்று தீா்மானம்’: இரு மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப அவையில் புதன்கிழமை (டிச.18) மத்திய அரசு தீா்மானம் கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆதரவு 269 - எதிா்ப்பு 198 வாக்குகள்

மக்களவையில் சுமாா் 90 நிமிஷங்கள் நீடித்த விவாதத்துக்குப் பின்னா், மசோதாக்களைத் தாக்கல் செய்வது தொடா்பாக முடிவு செய்வதற்காக புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனா். இதில், 92 எம்.பி.க்கள் திருத்தச் சீட்டுகளை வாங்கி வாக்குகளைப் பதிவு செய்தனா். பின்னா் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், இரு மசோதாக்களையும் சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT