மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் பாடமாக அமையும்: பிரதமர் மோடி
வறுமையைத் தாண்டி வெற்றியின் உச்சத்தை அடைந்தவர் மன்மோகன்.. மோடி புகழாரம்..
இந்தியாமன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் பாடமாக அமையும்: பிரதமர் மோடி
வறுமையைத் தாண்டி வெற்றியின் உச்சத்தை அடைந்தவர் மன்மோகன்.. மோடி புகழாரம்..
மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் விடியோ செய்தியில்,
மன்மோகன் சிங்கின் மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு மறக்கமுடியாதது.
அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு எப்போதும் ஒரு பாடமாக அமையும். வறுமையைத் தாண்டி வெற்றியின் உச்சத்தை அடைந்தவர். ஒழுக்கமான மனிதர், அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலைவர் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
பல்வேறு பதவிகளில் பணியாற்றியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சவாலான காலங்களில் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர், பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான அரசியல் நிதியமைச்சராக நாட்டை புதிய பொருளாதாரப் பாதையில் கொண்டு சென்றவர். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது.
முன்னாள் பிரதமரின் வாழ்க்கை, அவரது நேர்மை மற்றும் எளிமையின் பிரதிபலிப்பாகும் என்று குறிப்பிட்டார். உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று, முன்னணி பதவிகளை வகித்தாலும், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் தனது இயல்பான பின்னணியை ஒருபோதும் மறந்ததில்லை.
அவரது பணிவு, நிதானம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை அவரது வாழ்க்கையைப் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதியாக வரையறுத்துள்ளன, கடந்த சில ஆண்டுகளாக உடல் பலவீனமாக இருந்தபோதும் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வந்து எம்பியாக தனது கடமையை நிறைவேற்றுவதில் அவருடைய அர்ப்பணிப்பைப் பிரதமர் மோடி பாராட்டினார்.
மேலும், 2004-14-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பிரதமராக இருந்தபோதும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதும் பல தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து அவருடன் அடிக்கடி விவாதித்ததையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.