பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!
திருப்பரங்குன்றம் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பற்றி...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு நாளை(மார்ச் 1) பிரதமர் மோடி வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், கோயிலைச் சுற்றி செல்போன் சிக்னலைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயிலில் பாதுகாப்பு குறித்து இன்று சிறப்புப் படையினர் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
பிரதமர் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சுற்றுப் பகுதி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவின்போது மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த சர்ச்சை ஏற்பட்டது. இதன்பின்னர் பிரதமர் மோடி தற்போது திருப்பரங்குன்றம் வரவிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் பயணம்
பிரதமர் மோடி குஜராத் மற்றும் ராஜஸ்தான் பயணங்களைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையடுத்து, நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை புதுச்சேரி செல்லும் அவர், அங்கு ரூ. 2,700 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மார்ச் 1 மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ. 4,400 கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இதன்பின்னர் மதுரையில் நடைபெறும் என்டிஏ மாநாட்டில் பங்கேற்கிறார்.
இத்துடன், மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான புதிய நான்கு வழி நெடுஞ்சாலையின் பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
மேலும், அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு மற்றும் திருவாரூர் சந்திப்பு உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களையும் அவர் தொடக்கி வைக்கிறார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் ஒளிபரப்பு சேவைகளை வலுப்படுத்த, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் மூன்று புதிய ஆகாஷ்வாணி எஃப்எம் ரிலே டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PM Modi visit: Heavy security at Thiruparankundram temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.