பிகாரில் தேர்வர்கள் மீது தடியடி: பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேர்வர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் .
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேர்வர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் மாநில தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த முதல்நிலைத் போட்டித்தேர்வுக்கான(CCE) வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வை ரத்து செய்யக்கோரி அங்குள்ள மாணவர்கள் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேர்வர்களைக் கலைக்க அவர்கள் மீது அந்த மாநில காவல்துறை தடியடி நடத்தி வருகிறது.
Advertisement
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி, பிகார் அரசு ஊழலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அங்கு தேர்வர்களின் குரல் நசுக்கப்படுகிறது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"பிகாரில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தேர்வர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகளில் ஊழல், மோசடி, வினாத்தாள் கசிவைத் தடுப்பது அரசின் வேலை.
ஆனால் தேர்வுகளில் ஊழலை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக இளைஞர்களை குரல் எழுப்ப விடாமல் நசுக்குகின்றனர்.
இந்த கடுமையான குளிரில் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்துவதும் தேர்வர்கள் மீது தடியடி நடத்துவதும் இளைஞர்கள் மீதான 'இரட்டை என்ஜின்' பாஜகவின் இரட்டை அட்டூழியங்களின் அடையாளமாக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.