முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைந்து ஒரு சில நாள்களுக்குள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வியத்நாம் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.
அதேவேளையில், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை முறையாக ஏற்பாடு செய்யத் தவறிய மத்திய அரசு, கவனத்தை திசைத்திருப்பவே, ராகுல் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக காங்கிரஸ் பதில் கொடுத்துள்ளது.
இந்த வார்த்தை மோதல், பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ராகுலை விமரிசித்திருந்ததைத் தொடர்ந்து ஆரம்பித்தது.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாடே முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு துக்கம் அனுசரித்து வருகிறது. ஆனால், ராகுல் காந்தி புத்தாண்டைக் கொண்டாட வியத்நாம் பறந்துவிட்டார். காந்தி குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சீக்கியர்கள் என்றாலே பிடிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாக்கூர், பாஜக இன்னமும் பிரித்தாலும் அரசியலைத்தான் செய்கிறது. எப்போது இந்த சங்கிகள் டேக் டைவர்ஷன் அரசியலை நிறுத்தப் போகிறார்கள்? யமுனைக் கரையில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடத்த அனுமதிக்காத மோடி மற்றும் அவரது அமைச்சர்கள், எவ்வாறு மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை சுற்றிவளைத்தார்கள் என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் ராகுல் பயணம் மேற்கொண்டால், அது பற்றி பாஜகவுக்கு என்ன கவலை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு நிகழ்வில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், அவர்களது தனியுரிமைக்கு காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது என்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.