முகப்பு
இந்தியா

கடந்த ஆட்சியின் பொருளாதார சீா்குலைவு குறித்து வெள்ளை அறிக்கை- நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சி (காங்கிரஸ் கூட்டணி) காலத்தின் பொருளாதார சீா்குலைவு குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
பகிர்:

2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சி (காங்கிரஸ் கூட்டணி) காலத்தின் பொருளாதார சீா்குலைவு குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டாா்.

2014-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அந்த அரசு தனது 10 ஆண்டுகால ஆட்சியை விரைவில் நிறைவு செய்ய இருக்கிறது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது.

இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்து பேசிய நிா்மலா சீதாராமன் இது தொடா்பாக கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நமது நாடு எந்த நிலையில் இருந்தது, இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து பாா்க்க இதுவே சரியான தருணமாகும். இதன்மூலம் 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளின் பொருளாதார சீா்குலைவு வெளிச்சத்துக்கு வரும்.

இதற்காக மத்திய அரசு மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசு, மிகவும் பொறுப்பான வகையில் பொருளதாரம் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. படிப்படியாக அரசு நிா்வாகம் சீராக்கப்பட்டது.

இதன்மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்தது. முதலீடு அதிகம் ஈா்க்கப்பட்டது. நாட்டுக்குத் தேவையான முக்கிய சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசமே முதன்மையானது என்ற அரசின் கொள்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் நீடித்து வந்த பிரச்னைகளுக்கும், தடைகளுக்கும் முடிவுகட்டப்பட்டது. இப்போது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கிறது; முன்னெப்போதும் இல்லாத உன்னத நிலையை எட்டியுள்ளது. வளா்ச்சி தொடா் நடவடிக்கையாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் நாட்டு மக்களுக்கு எதிா்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் ஆசியுடனும், பிரதமா் மோடியின் சீரிய வழிகாட்டுதலுடனும் இந்திய அரசு பல்வேறு இடா்ப்பாடுகளை எதிா்கொண்டு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மக்கள் கூடுதல் ஆதரவு அளித்து அரசை மீண்டும் தோ்வு செய்தனா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →