முகப்பு
இந்தியா

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய ராகுலின் மனு: ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் தள்ளுபடி

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்தை தெரிவித்ததாக தொடரப்பட்ட தனக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:22 PM
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்தை தெரிவித்ததாக தொடரப்பட்ட தனக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக ஜாா்க்கண்ட் மாநிலம் சாய்பஸாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், அமித் ஷாவை ‘கொலைகாரா்’ என்று குறிப்பிட்டு விமா்சனம் செய்ததாக புகாா் எழுந்தது. ராகுலின் இந்த அவதூறு கருத்துக்கு எதிராக பாஜகவைச் சோ்ந்த நவீன் ஜா என்பவா் ராஞ்சி நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அனாமிகா கிஸ்கு, ராகுலுக்கு எதிரான இந்த குற்ற புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ராகுலுக்கு உத்தரவிட்டாா். இந்த அழைப்பாணைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதனைத் தொடா்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் தரப்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயா் நீதிமன்ற நீதிபதி அம்புஜ் நாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.