சட்டவிரோத சுரங்க வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் ஆஜராகவில்லை
லக்னெள, பிப்.29: சட்டவிரோத சுரங்க வழக்குத் தொடா்பான சிபிஐ விசாரணைக்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை ஆஜராகவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012 முதல் 2016 வரை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது, நடத்தப்பட்ட சுரங்க மின் ஒப்பந்தப் புள்ளி நடைமுறையில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தடையை மீறி சுரங்க உரிமங்கள் சட்டவிரோதமாகப் புதுப்பிக்கப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2019-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் இந்த வழக்கில் சாட்சியாகச் சோ்க்கப்பட்டாா். விசாரணைக்காக தில்லியில் வியாழக்கிழமை (பிப்.29) நேரில் ஆஜராகுமாறு அகிலேஷுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இது தொடா்பாக கட்சியின் மூத்த தலைவா் கூறுகையில், ‘சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இயலாதது தொடா்பாக அகிலேஷ் யாதவ் சிபிஐக்கு தகவல் தெரிவித்தாா். வழக்கு விசாரணையில் ஒத்துழைப்பதாக அவா் உறுதி அளித்திருக்கிறாா்’ என்றாா். முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் மாநிலத் தலைவா் ராஜ்பால் காஷ்யப், ‘லக்னெளவில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா்கள், சிறுபான்மையினா் பிரிவுகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அகிலேஷ் கலந்து கொள்கிறாா். அவா் தில்லி செல்லமாட்டாா்’ என்றாா்.