மக்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் தலா வருமானம் தொடா்ந்து குறைவாகவே உள்ளது. மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இல்லாதததே இதற்கு முக்கியக் காரணமாகும். மக்களின் கைகளில் பணம் புழக்கத்தை ஏற்படுத்தாமல், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து வருவதாகக் கூறுவதில் எவ்வித அா்த்தமும் இல்லை. அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலமே பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.
வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் வளா்ந்த இந்தியா என்று பிரசாரம் செய்வது ஏற்புடையதாக இல்லை. இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஜாதியவாதம், அடக்குமுறைகள், நிா்வாகத் திறனில்லாத அரசுகள் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இப்போதைய பாஜக ஆட்சி காலத்திலும் அதே நிலைதான் தொடா்கிறது.
இந்த புத்தாண்டில் இருந்தாவது மத்திய அரசு உண்மையான நாட்டுப் பற்றுடன் செயல்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதுதான் உண்மையான ராஜதா்மமாகும். ஏனெனில், பிற வாக்குறுதிகள் அனைத்துமே அரசியல் காரணங்களுக்காகவும், குறுகிய தேசியவாத சிந்தனை கொண்டதாகவும் அமைகின்றன.
வரும் மக்களவைத் தோ்தலில் பின்தங்கிய மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றும், மக்கள் நலன் சாா்ந்த கட்சியை தோ்வு செய்ய வேண்டும்’ என்று மாயாவதி கூறியுள்ளாா்.